தமிழக செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? - அண்ணாமலை கேள்வி

ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதற்கு திமுக, அதிமுக, தவெக உட்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், மும்மொழிக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது.

"தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?

அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு படிக்கிறார். திமுகவில் தலைவர்கள் தொடங்கி கவுன்சிலர் மகன் வரை 3 மொழிகளை படிக்கின்றனர். திமுகவினர் குழந்தைகள் 3 மொழி படிப்பது தவறில்லை. அரசுப் பள்ளி மாணவர்கள் படிப்பதை ஏன் தடுக்கிறீர்கள்? தமிழை வைத்து அரசியல் செய்கிறார்கள். மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் கூட சரியாக தெரியவில்லை"

புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமாக படிக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு கமிட்டி கொடுத்த அறிக்கையை வேண்டாம் என திருத்தியவர் பிரதமர் மோடி. தாய்மொழி, ஆங்கிலம் தவிர பிடித்த ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்படி பிரதமர் அறிக்கையை திருத்தினார். இந்தி தெரியாத மாநிலங்கள் எப்படி யோசிப்பார்கள் என பிரதமர் நினைத்து இதனை செயல்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்தி மொழியை திணிப்பதாக தவறாக நினைத்து தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து வருகின்றனர்."

இவ்வாறு அவர் அதில் பேசியுள்ளார்.