சென்னை,
13 பேர் உயிரைப் பறித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு பற்றியே சட்டசபையில் பதிவு செய்யாமல், ஒரு முதல்-அமைச்சர் குறிப்பாக விவரங்களை சொல்லிப் பதிலளிக்காமல், பொத்தாம் பொதுவாகப் பேசி அவையின் உரிமையை மீறினார்.
13 பேர் இறந்ததை படுகொலை என்றுகூட பதிவு செய்திட முதல்-அமைச்சருக்கும் மனமில்லை; அனுமதிக்க சபாநாயகருக்கும் விருப்பம் இல்லை என்ற வினோதமான விபரீத நிலையில், தமிழ்நாடு சட்டசபையின் நடவடிக்கைகள் மக்கள் நலனை மறந்து, ஏதோ பெயருக்காக நடைபெறுகின்றன.
இதைத் தடுத்து நிறுத்திட, அவை நடவடிக்கைகளை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்கள் அறிந்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தாலும், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்திற்காக, அதையும் மறுத்துவிட்டார்கள். வீண்விழா கொண்டாட்டங்களிலும் வெற்று விளம்பரங்களிலும் கோடி கோடியாக அரசுப் பணத்தைக் கொட்டிச் செலவழிக்கும் இந்த அரசு, அவையின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பணமில்லை என்று பச்சைப் பொய்யை கூறியது. ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படைத்தன்மையோடும் முறையான விவாதங்களுடன் நடைபெறவேண்டிய சட்டமன்றத்தில், மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி வாதிடவும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துவைக்கவும் அனைத்துக் கதவுகளும் அறவே மூடப்பட்டுவிட்டன.
துப்பாக்கி சூட்டையே மறைத்திடும் முதல்-அமைச்சரின் முயற்சியினாலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முறைப்படியான நடவடிக்கை எடுக்காததாலும், இனியும் சட்டமன்றத்தில் அமர்ந்து பொய் புரட்டுகளையும் வறட்டு விளக்கங்களையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டு அமைதிகாப்பது, வாக்களித்த மக்களை வஞ்சிப்பதாக அமையும் என்றே சட்டமன்ற நடவடிக்கைகளை இந்த தொடர் முழுவதும் புறக்கணிப்பதாக தி.மு.க. கொறடா அறிவித்தார்.
கடந்த 1-6-2018 அன்று திருவாரூரில் நடைபெற்ற தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தி.மு.க. சட்டமன்ற நடவடிக்கைகளில் மீண்டும் பங்கேற்க வேண்டும் என்று மிகுந்த அக்கறையோடு ஆலோசனை வழங்கினார்கள். அ.தி.மு.க. அரசின் அடாவடிகளாலும், அடக்குமுறைகளாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் பல்வேறு தரப்பு மக்களும் நீங்கள் சட்டமன்றத்திற்குச் செல்லுங்கள்;. எங்களுடைய குரலை பிரதிநிதித்துவப்படுத்துங்கள்; அப்போதுதான் எங்களுக்குச் சரியான பாதுகாப்பு என்று வலியுறுத்தினார்கள்.
குறிப்பாக, பலர் என் செல்பேசியிலேயே அழைத்து, நீங்கள் வெளியில் இருந்தால் அ.தி.மு.க. அரசு மக்கள் விரோதத் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி விடுவார்கள்; ஜனநாயக விரோத எண்ணங்களைப் பதிவுசெய்து விடுவார்கள் என்று கூறி சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதித்து, சட்டமன்றத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுத்து உருவாக்கிட, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.
சபாநாயகரை, பதவியில் அமர்த்தியபோது இருந்த அந்த நம்பிக்கை இடையில் தளர்ந்துவிட்டாலும், என்றைக்கும் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயலாக்கத்தில் ஈடுபாடு காட்டும் மாபெரும் இயக்கம் தி.மு.க. என்ற அடிப்படையிலும், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் சட்டமன்றத்திற்குச் செல்கிறோம். எவ்வளவு குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக எடுத்துவைத்து, அ.தி.மு.க. அரசின் ஜனநாயகவிரோத, சட்டவிரோத நடவடிக்கைகளை எப்போதும்போல உறுதியாக எதிர்கொண்டு, தமிழக நலனுக்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் மீண்டும் ஈடுபடுவோம்.
தமிழக மக்களின் நலனுக்காக வலிமையாக வாதாடுவதும் அறவழியில் அயராது போராடுவதும், இப்போது துப்பாக்கிச் சூட்டுக்குப்பின் உருவாகியுள்ள இந்த நெருக்கடியான நேரத்தின் அத்தியாவசியத் தேவை என்பதால், ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்து, இந்த முடிவை தி.மு.க. எடுத்திருக்கிறது என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. எடுக்கும் எந்த முடிவும், நாடு- இனம் - மொழி ஆகியவற்றை மையப்படுத்தியும், அவற்றின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தியும் அமைந்து வருவதை, தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் வைத்த யோசனைகளை பரிசீலித்து, சட்டமன்றம் செல்வது என்று முடிவு செய்தது மிகவும் வரவேற்கத்தகுந்த ஒன்று என்று கூறியுள்ளார்.