சென்னை,
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் அனுப்பினார். ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது;-
நேற்றிலிருந்து தேவையில்லாத குழப்பம் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்னால் சிரமமும் ஏதும் வரக்கூடாது என்று நினைப்பவன் நான். தேர்தல் தொடர்பாக மாநில அளவிலான சில பொறுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தப் பொறுப்புகளில் நான் தொடரவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தெரிவித்துவிட்டேன். இது கடந்த 4 நாள்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ஒன்று அதைப்பற்றிய விவாதங்கள் தற்போது தேவையில்லாதது.
மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெருவதற்காக நான் அயராது உழைப்பேன்
இவ்வாறு அவர் கூறினார்.