தமிழக செய்திகள்

'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? - கனிமொழி எம்.பி.

தொடரும் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் உள்ள பெண் சப்-இன்ஸ்பெக்டர் அணிந்துள்ள சீருடைதான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் இடம்பெறும் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அணியும் சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீருடை வழக்கமான போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அணியும் சீருடை அல்ல.

மிடுக்கான உடை

நேவி ப்ளு கலரில் அரை-கை மேல் சட்டையும், காக்கி கலர் பேண்டும் சீருடையாக கொடுக்கப்பட உள்ளது. கருப்பு கலர் தொப்பியும், கருப்பு கலர் ஷூ-வும் அணிந்து பார்ப்பதற்கு மிடுக்காக காணப்படும் வகையில் இந்த சீருடை உள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்கவிழா 27ம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடக்க இருந்தது. முதல்-அமைச்சர் விஜய் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்தார். முதல்-அமைச்சர் 27ம் தேதி டெல்லி சென்றுவிட்டதால், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டது.

மீண்டும் விழா ரத்து

இதனையடுத்து, இந்த திட்டத்தை இன்று (29-05-26) தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் ராஜரத்தினம் மைதானத்தில் துரிதமாக நடைபெற்ற வந்த நிலையில், இந்த தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடக்க விழா குறித்த அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த துவக்க விழா நடக்க இருந்தது, ஆனால் அதுவும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி. கேள்வி

இந்த நிலையில், 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருபப்தாவது;-

கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.