தமிழக செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினத்தந்தி

தேனி,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேனி மாவட்டம் போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அவர் ஒரு வீடியோ படப்பிடிப்பு எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவு அமைதியாக, பொறுமையாக, உத்தமபுத்திரனாக, கையெடுத்துக் கும்பிட்டு நாட்டுக்கு நல்லது செய்தது போல மக்களை ஏமாற்றுகிறார்.

அரசியலில் ஒரு சிலருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். அதுபோல அதிர்ஷ்டம் அடித்தவர்தான் இவர். 1 முறை அல்ல 3 முறை. கருணாநிதிக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. ஜெயலலிதாவிற்கு கிடைத்தது, அது வேறு. இவருக்கு 3 முறை முதல்-அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது. அது எப்படி என்பது உங்களுக்கு தெரியும். மூன்று முறை முதல்-அமைச்சராக இருந்தாரே தவிர நாட்டிற்கு ஏதாவது செய்து இருக்கிறாரா? நாட்டு மக்களைப் பற்றி ஏதாவது சிந்தித்து இருக்கிறாரா? இல்லை.

அவருக்கு அந்த மூன்று முறை பொறுப்பு கொடுத்த ஜெயலலிதாவைப் பற்றி கூட அவர் கவலைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் அந்த மர்மம் என்ன என்று இதுவரை அவரும் சொல்லவில்லை. அந்த கட்சியில் இருக்கக்கூடிய யாரும் சொல்லவில்லை.

வரும் 27-ந் தேதி சசிகலா வெளியே வரப்போகிறார் என்பது உங்களுக்கு தெரியும். வந்ததற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருப்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குறி. அந்த பிரச்சினையை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். நீதிவிசாரணை கேட்டது நாங்கள் அல்ல. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது நாங்கள் அல்ல. ஓ.பன்னீர்செல்வம்தான் சொன்னார்.

விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் உண்மை வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை 8 முறை ஆஜராக அழைத்தார்கள். ஒருமுறை கூட அவர் செல்லவில்லை. இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். ஜெயலலிதா படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

இலவச மின்சாரத்தை 1989-ல் கருணாநிதிதான் முதல்-அமைச்சராக இருந்தபோது வழங்கினார் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் இப்போது இருக்கக்கூடிய விவசாய கடனை முழுமையாக - நிச்சயமாக தள்ளுபடி செய்யப்போகிறோம். இதனைக் கருணாநிதி வழிநின்று, கருணாநிதி பிள்ளையாக நான் உறுதி சொல்கிறேன்.

அதேபோல நகை கடன் பற்றி சொன்னார்கள். 5 சவரன் வரை இருக்கும் நகை கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்போகிறோம். எனக்கு இப்போது ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நாம் அறிவித்து விட்டோம். இப்போது அ.தி.மு.க. அந்த அறிவிப்பை விரைவில் வெளியிடப்போகிறார்கள். நிச்சயமாக வரும். எப்படியோ தள்ளுபடி செய்தால் மகிழ்ச்சி. இருப்பினும் தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகிறது. நாம்தான் தள்ளுபடி செய்யப்போகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

100 நாள் வேலைத்திட்டத்தை பற்றி பேசினீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம் என்ற உறுதியை இப்போது சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை