சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.
இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தால் அதிகாரிகள் போனை எடுக்கவில்லை. இதனால் பலர் நேரில் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள் 10 நிமிடத்தில் மின்சாரம் வந்துவிடும் என்று தெரிவித்தனர். ஆனால் நள்ளிரவு 2 மணி வரை மின்சாரம் வரவில்லை. மேலும் 2 மணி முதல் 3 மணி வரை குறைந்த மின்னழுத்தம் அதிகப்படியான மின்னழுத்தமும் வந்ததால் பொதுமக்கள் தூங்காமல் கடும் அவதிப்பட்டனர்.
இதேபோன்று ஆவடி, பட்டாபிராம் போன்ற பகுதிகளிலும் இரவு 4 மணி நெரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர் மின் வெட்டால் வெப்பத்தில் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.
கோடை காலங்களில் இதுபோன்று மின்வெட்டு வராமல் சீரான மின் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. பல டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன. நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். முன்பு மின் துறையை நிர்வகித்தவர்கள் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் வயர்கள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்வாரியத்தில் தவறுகள் நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு லட்சம் பணியாளர்கள் இருக்க வேண்டிய மின்வாரியத்துறையில் 52,000 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றபொது எந்த விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. சென்னையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.