தமிழக செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்துவிடும். ஆனால் நடப்பாண்டு வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் வடகிழக்கு பருவமழை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி தமிழக கடலோர மாவட்டங்கள் உள்பட உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரிலும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு மழை தொடருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் கூறியதாவது:-

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) பரவலாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தொடர்ந்து நாளையும் (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழையும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். இதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது இருக்கும் நிலை வருகிற 7-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 4 சென்டி மீட்டர், கேளம்பாக்கம், திருவாரூர், தொண்டி தலா 3 செ.மீ., நாகப்பட்டினம், மாமல்லபுரம், காரைக்கால், ராமேஸ்வரம் தலா 2 செ.மீ., உத்திரமேரூர், குன்னூர், பட்டுக்கோட்டை, சோழிங்கநல்லூர், புதுச்சேரி, வெம்பாக்கம், கடலூர், சென்னை விமான நிலையம், காவேரிப்பாக்கம் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்