வளவனூர் பேரூராட்சியில் அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஆனால் மிகவும் அவசிய தேவையான தீயணைப்பு நிலையம் மட்டும் இங்கு இல்லாததை வளவனூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பெரும் குறையாக கருதுகின்றனர்.
காலதாமதம்
வளவனூர் பகுதியிலோ அல்லது சுற்றுவட்டார கிராமப்புறங்களிலோ ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டாலோ, சாலை விபத்துகளில் வாகனங்கள் சிக்கிக்கொண்டாலோ அல்லது மழைக்காலங்களில் பேரிடர் மீட்பு அவசர தேவைகளுக்கு தீயணைப்பு வீரர்களை பயன்படுத்த விழுப்புரம் நகரத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்துதான் விபத்தின் தன்மைக்கேற்ற ஒரு தீயணைப்பு வாகனமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களோ வரவழைக்க வேண்டியுள்ளது. தூரம் சற்று அதிகம் என்றாலும்கூட போக்குவரத்து நெரிசல் பிரச்சினை காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பெரும்பாலான சமயங்களில் தீ விபத்துக்குள்ளாகும் இடம் முற்றிலும் எரிந்து சேதமடைந்து விடுகிறது.
தீ விபத்துகள்
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இளங்காடு கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 7 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பஞ்சமாதேவி கிராமத்தில் இருந்த கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் விழுப்புரத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் சென்றபோதிலும் அதற்குள் கோழிப்பண்ணை முழுவதுமாக தீயில் எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி செத்தன.
எனவே வளவனூர் பகுதியிலோ அல்லது சுற்றுவட்டார கிராமப்புறங்களிலோ ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று தீயை அணைத்து பெரும் விபத்து மற்றும் பொருட்சேதத்தை தவிர்க்க வேண்டுமென்றால் விழுப்புரத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் விரைந்து வருவது என்பது சாத்தியமற்றது. ஆகவே வளவனூரில் தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இன்றியமையாத தேவையாகும்.
பேருதவியாக இருக்கும்
இதுகுறித்து வளவனூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பூபதிராஜன் கூறுகையில், இளங்காடு, செங்காடு, சிறுவந்தாடு, பக்கமேடு, தொந்திரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் அதிகளவில் குடிசை வீடுகள், கூரை வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஏதேனும் தீ விபத்து நிகழ்ந்தால் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் தீயணைப்பு வாகனம் அங்குள்ள நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், கோலியனூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அதன் பின்னர் வளவனூர் கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இவற்றையெல்லாம் கடந்து சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் தீ முழுவதுமாக எரிந்து வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாகி விடுகிறது. அதன் பின்னர் தீயணைப்புத்துறையினர் வந்து பெயரளவிற்கு தண்ணீரை பீய்ச்சியடித்துவிட்டு திரும்புகின்றனர். எனவே வளவனூருக்கு தீயணைப்பு நிலையம் அமைத்து கொடுத்துல் பேருதவியாக இருக்கும் என்றார்.
உயிர்சேதம் தடுக்கப்படும்
வளவனூரை சேர்ந்த சுரேஷ் கூறும்போது, வளவனூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைந்தால் இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் தீ விபத்து, சாலை விபத்து மீட்பு பணிக்கு பேருதவியாக இருக்கும். ஆகவே இப்பகுதி மக்களின் நலன் கருதி வளவனூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்பட்டு உயிர்சேதமும் தடுக்கப்படும் என்றார்.