சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் ஆண்டு தேர்வினை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதேபோல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் ஆண்டு பொதுத்தேர்வினை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் ஜூன் 14-ந்தேதி முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகிக்கும் பணி நாளை முதல் தொடங்கஉள்ளன. கல்வி தொலைக்காட்சியில் நடப்பு கல்வியாண்டுக்கான பாட ஒளிப்பரப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.