தமிழக செய்திகள்

7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவை மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும் - திருமாவளவன்

7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவை மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:-

"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் காட்டியிருக்கும் அக்கறையைப் பாராட்டுகிறோம்.

ஆனால், அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் இந்த விடுதலையைச் சாத்தியப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், சிபிஐயின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததைக் காரணமாகக் கூறினார்.

ஆனால், அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்திவந்த ஆளுநர் கடைசியில் குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்க வேண்டும், எனவே அவருக்கு அனுப்பி விட்டேன் என்று கூறிவிட்டார்.

அப்படி அவர் அனுப்பியிருந்தால் அது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தண்டனை குறைப்புச் செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறது. அது, பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே, 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்தத் தவறைச் சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது.

எனவே, 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்