தமிழக செய்திகள்

மழை நீர் தேங்காமல் செம்மஞ்சேரி பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு - முதல்வர் பழனிசாமி

தென்சென்னை பகுதிகளான செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற பகுதிகளிலில் மழை நீர் தேங்காமல் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தினத்தந்தி

சென்னை

நிவர் புயல் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிக்கரணை, ஒக்கியம் மடு, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல் காரணமாக அண்மையில் பெய்த கனமழை யால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். பருவ காலங்களில் பொழிகின்ற கனமழையினால் ஒவ்வொரு முறையும் சென்னை மாநகரம் மற்றும் சென்னை மாநகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதால், அப்பகுதிகளிலுள்ள தண்ணீரை வெளியேற்ற நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்காக நானே நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன்.

மேலும், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளையும் வரவழைத்து அவர்கள் மூலமாக தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய தண்ணீரை அகற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மஞ்சேரி பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். தென்சென்னை பகுதிகளான செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து வரும் மழை நீர் முழுவதும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வந்து சேர்ந்து பின்னர் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் சேரும்படி இயற்கையாகவே அமைந்துள்ளது.

இதில் ராம் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 2004ஆம் ஆண்டு 80 சதவீதத்திற்கு மேல் காலியான நிலங்கள் இருந்தன. தற்பொழுது, மக்கள் நெருக்கமாக வாழக்கூடிய குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. வெள்ளம் வடிவதற்கு உண்டான தீர்வாக, இந்தச் சதுப்பு நிலத்திலிருந்து ஒக்கியம் மடு வழியாக பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்கும் முகத்துவாரம் தற்போது 30 மீட்டர் அகலம் உள்ளதை 100 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

சதுப்பு நிலத்தை முழுமையாக ஆழப்படுத்தும் காலம் அதிகமாகுமென்பதால் உடனடியாக செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலத்தில் அகலமான பேபிவாய்க்கால்களை ஒக்கியம் மடு வரை பொதுப்பணித் துறை உருவாக்கி வருகிறது. ஒக்கியம் மடுவிலும் இதேபோன்ற ஒரு கால்வாயை பக்கிங்காம் கால்வாய் வரை பொதுப்பணித் துறை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக தாழ்வான பகுதியில் இருக்கிற தண்ணீரை வெளியேற்ற வேண்டுமென்று உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தவிர, வேளச்சேரி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் ஏறத்தாழ நான்கு கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கரணை வருவதற்குப் பதிலாக, மத்தியப் பகுதியில் அமைகின்ற கால்வாய் மூலமாக நேராக இரண்டு கிலோ மீட்டரில் வருவதுபோல் ஏற்பாடு செய்து, தண்ணீர் தேங்காமல் எளிதாக வெளியேற நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

நீண்டகாலத் திட்டமாக, தற்பொழுது கிழக்கு தாம்பரம், மாம்பாக்கம், செம்பாக்கம் போன்ற இடங்களிலிருந்து வரும் மழை நீர், செம்மஞ்சேரி வந்தடைந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கியம் மடு, பக்கிங் கால்வாய், முட்டுக்காடு வழியாகக் கடலில் கலக்கிறது.

மேற்படி நீர்வழித் தடத்திற்கு கூடுதலாகவும், விரைவாகவும் வெள்ள நீர் வடிய ஏதுவாக புதுப்பாக்கம், சிப்காட்-நாவலூர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சாலை மற்றும் துரைப்பாக்கம் சாலையிலிருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய்க்குச் செல்ல பெரிய கால்வாய்களைக் கட்ட வேண்டும் என்பதற்காக என்னுடைய அரசு ரூபாய் 581 கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயலாக்கம் செய்ய மத்திய அரசின் சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது, கிடைக்குமென்று நம்புகிறோம்.

பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வந்து சேர்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால், 3, 4 இடங்களில் கால்வாய்கள் அமைத்து தேங்கியுள்ள தண்ணீரைக் கொண்டு வரும்போது, தண்ணீர் தேங்காத ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசால் திட்டமிட்டுப்பட்டு வருகிறது. இதன்மூலம் பக்கிங்காம் கால்வாய்க்கு வெள்ள நீர் விரைந்து சேர்வதால் மேற்படி தென்சென்னைப் பகுதிகள் முழுவதற்கும் நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும்.

இதனால் இங்கு வசிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். இவ்வாறு கனமழை பொழிகின்றபொழுது மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தண்ணீர் தேங்குவதால் உள்ளாகும் சிரமத்திற்கு நிரந்தரத் தீர்வு காண அரசால் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் பாதிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிகளுக்கு நிரந்தத் தீர்வு காண ஏதுவாகத் திட்டம் செயலாக்கப்பட வேண்டுமென்று கடந்த 28.10.2020 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி, இப்பகுதிகளில் மாற்றுக் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளைத் தரம் உயர்த்தும் பணிக்காக ரூபாய் 71.30 கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்த உலக வங்கித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனினும், இப்பணியின் அவசியம் கருதி மாநில நிதியிலிருந்தே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 8 லட்சம் மக்கள், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுத்துக் காப்பாற்றப்படுவார்கள் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து