மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி வத்சலா (வயது 58). ரங்கராஜ் என்பவரது மகள் அட்சயா(28). பி.இ. முடித்துள்ள இவர் வத்சலாவின் சகோதரி மகள் ஆவார். வத்சலாவும், அட்சயாவும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஒரு மொபட்டில் நேற்று மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தனர். பழைய சுங்கச்சாவடி அருகே அவர்கள் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கிய வத்சலா தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெண் என்ஜினீயர் படுகாயம்
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அட்சயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அட்சயா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வத்சலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பஸ் டிரைவர் சின்னசாமியை(49) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.