ஆவடியை அடுத்த அண்ணனூர், தேவி நகர், சுபாஷ் தெருவைச் சேர்ந்தவர் மோகன். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லதா என்ற பாக்கிய லதா (வயது 50). இவர்களுடைய மகள் ஷெலின் கில்டா (23).
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை திருமுல்லைவாயலில் இருந்து சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். லதா தனது மகள் ஷெலின் கில்டாவுடன் மொபட்டிலும், மோகன் தனியாக மோட்டார் சைக்கிளிலும் சென்றனர்.
திருமுல்லைவாயல் தென்றல் நகர் அருகே சி.டி.எச்.சாலை வளைவில் திரும்பும் போது, முன்னால் சென்ற காருக்கும், ஷெலின் கில்டா ஓட்டிச்சென்ற மொபட்டுக்கும் நடுவில் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி வேகமாக சென்றது.
அப்போது அந்த லாரி முன்னால் சென்ற காரின் பின்பகுதியில் இடித்ததுடன், பக்கவாட்டில் சென்ற இவர்களது மொபட்டின் மீதும் மோதியது. இதில் மொபட்டில் இருந்து தாய்-மகள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். மொபட்டின் பின்புறம் அமர்ந்து இருந்த லதா சாலையில் விழுந்தார். அவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.
லாரி சக்கரத்தில் சிக்கிய லதா, தனது கணவர் மற்றும் மகள் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ஷெலின் கில்டா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரான திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த குருவாயூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகு (19). இவர் கடந்த 3 ஆண்டுகளாக திருவொற்றியூர் பெரியார் நகரில் தங்கி, எல்லையம்மன் கோவில் அருகே உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்து கடைக்கு செல்ல திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த பிராட்வே செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 56 டி) இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரகு, மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
இதுபற்றி திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் (46) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.