கடையநல்லூர்:
மேல கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 26, 27, 28 ஆகிய வார்டுகளை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து நேற்று கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்களது பகுதிக்கு கடந்த 25 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறியும், உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி தலைவர் ஹபீப் ரஹ்மான் அதிகாரிகளை அழைத்து அந்த வார்டுகளுக்கு விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.