திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியில் உள்ள காலனி தென்னைமர பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக குடி நீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் வந்த பெண்கள் மங்கலம் - அவலூர்பேட்டை சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த பேராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.