தமிழக செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

மணிமேகலை விருது

ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்டமைப்புகள், நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.3 லட்சம், வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.5 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1 லட்சம், நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்

பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.3 லட்சம், நகர அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.5 லட்சம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், ஊராட்சி அள விலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம், நகர பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

ஆகவே கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் விண்ணப்பங்களை வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நகர பகுதிகளை சேர்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் கடலூர் மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் மணிமேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.