மேச்சேரி:
பெண்கள் சாலைமறியல்
ஜலகண்டாபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், வீட்டில் இருநத் பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த நபரை பிடித்து காப்பகத்தில் சேர்க்க வலியுறுத்தி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த நபரை பிடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்தநிலையில் அந்த நபர் நேற்று தப்பித்து வந்து விட்டார். ஜலகண்டாபுரத்தில் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி பொதுமக்கள் மீது எறிந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ஜலகண்டாபுரம்- எடப்பாடி சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஆவடத்தூர் கிராம நிர்வாக அதிகாரி வினித்குமார், ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
கைது
விசாரணையில் அவர், கட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 38) என்பதும், பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரது பாட்டியை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தாசில்தார் முத்துராஜா ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.