தமிழக செய்திகள்

‘பெண்களின் பாதுகாப்பு பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

அழகு நிலையங்களுக்கு சென்று அடித்து உதைப்பவர்கள் தி.மு.க.வினர் என்றும், எனவே பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்து சுமார் 75 சதவீத வாக்குகள் எங்களுக்கு கிடைக்க இருக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

எனவே கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிந்தாமால், சிதறாமல் உங்கள் வாக்குகளை நம்முடைய கூட்டணி வேட்பாளர்களுக்கு செலுத்திட வேண்டும்.

கோடநாடு கொலை வழக்கில் என்னை தொடர்புபடுத்தி எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுக்கதை கட்டி வருகிறார். கோடநாடு கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த கொலை சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததே இந்த அரசு தான். இந்த கொலையில் ஈடுபட்ட கூலிப்படையில் உள்ள சயன், மனோஜ் ஆகிய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆனால் அவர்களை மு.க.ஸ்டாலினின் ஆணையின் பேரில் தி.மு.க. நிர்வாகிகள் ஜாமீன் வழங்கி வெளிக்கொண்டு வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் இதுவரை தி.மு.க.விற்கு மட்டும் தலைவராக இருந்தார். தற்போது கூலிப்படைக்கும் தலைவராகிவிட்டார் என்று தான் அறியமுடிகிறது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2ஜி வழக்கில் மு.க.ஸ்டாலின் உட்படுத்தப்படுகிறார் என்ற தகவலை சொன்னதற்காக சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்றைய தி.மு.க. அரசால் அந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. ஆனால், அது கொலைதான் என்று அவரது குடும்பம் கூறி வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட சாதிக்பாட்சா மனைவி ரேணுகா பானு மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தேர்தல் முடிந்தவுடன் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பெண்களை எப்படி மதித்து வருகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும். தி.மு.க.வினர்தான் பெண்கள் நடத்தக்கூடிய அழகு நிலையங்களுக்குச் சென்று அவர்களை அடித்து உதைக்கிறார்கள்.

ரெயில் பயணத்தின் போது தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு நிர்வாகி சிறுமியிடம் சில்மிஷம் செய்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் கட்சிதான் தி.மு.க. இவ்வாறு அராஜக செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தி.மு.க.வுக்கு பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நான் ஒரு விவசாயி. இன்றைக்கும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளின் கஷ்ட-நஷ்டங்களை அறிந்ததால் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி குடிமராமத்து என்ற திட்டம் துவங்கப்பட்டு இதுவரை 3,200 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது.

பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீரை வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுகளில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கிறோம்.

சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பிரசவ காலங்களில் தாய்மார்கள் இறப்பு விகிதமும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் குறைந்துள்ளன.

எனவே, இது போன்ற மக்கள் நலப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி மக்களுக்காக பணியாற்றுகின்ற அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்கள் அனைவரையும் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு