தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற விபத்தில் மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆனந்தமடம் பச்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்த பழனியின் மகன் மாடசாமி (55) மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று நள்ளிரவு 11 மணியளவில், மாடசாமி மற்றும் அவருடன் வேலை செய்த இருவர் வெட்டப்பட்ட மரங்களை டாடா ஏசி சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, குறுக்குச்சாலை சாமி பல்க் பகுதியில் சாலையோரமாக வாகனத்தை நிறுத்திய அவர்கள், அருகில் இருந்த உணவகத்திற்குச் சென்று உணவருந்தியுள்ளனர். பின்னர் மீண்டும் தங்களது வாகனம் நின்றிருந்த இடத்திற்குச் செல்ல மாடசாமி சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில், தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மாடசாமி மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மாடசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.