திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 46) திருச்சி துறையூரை சேர்ந்த இலங்கை தமிழர் அல்லாத கண்ணன் (49) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கண்ணன் தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டி முகாமில் வசித்து வந்தார். கண்ணன் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முகாமில் தனது வீட்டில் புடவையை கொண்டு கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் போரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோல திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (55). இவர் வயிற்று வலியால் அடிக்கடி அதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஈக்காடு அருகே உள்ள தனியார் விடுதி ஓரம் சாலையோரத்தில் இருந்த மரத்தில் கயிறால் ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற புலரம்பாக்கம் போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.