சென்னை,
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அவரிடம் திரைப்பட சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கொரோனா காரணமாக திரைப்படத்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள், பிராணிகள் நல வாரிய சான்றிதழ் பெறுதல், படப்பிடிப்புகளுக்கு ஒற்றை சாளர முறை அனுமதி, மண்டல திரைப்பட தணிக்கை அலுவலகங்களில் பிராணிகள் நல வாரிய பிரிவை ஏற்படுத்துதல், திரைப்பட தணிக்கை வாரியத்தில் திரைப்படத்துறையை சேர்ந்தவர்களை அதிகம் இடம்பெறச் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன.
நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
திரைப்பட வர்த்தக சபைக்கு உட்பட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்களை சந்தித்தது பெருமை அளிக்கிறது. திரைப்படத்துறையினரின் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.
திரைப்படத்துறையில் தொழில் புரிவதை எளிமையாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்கு பல்வேறு துறைகளிடம் எங்கு அனுமதி பெறுவது என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய இணையதளம் அமைச்சகத்தின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய இணையதளம் தயாரிப்பாளர்கள், இந்தியாவில் எந்த பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கு வகை செய்வதோடு, தொழில் புரிவதை எளிமையாக்குவதை உறுதி செய்யும். அனிமேஷன் கல்வி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தை பயில உலக தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.