தமிழக செய்திகள்

யாஸ் புயல்; தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

யாஸ் புயலால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

வங்கக்கடலில் யாஸ் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் தீவிரம் அடைந்து ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் தமிழக கடலோர பகுதிகளில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் லேசான வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதே நேரத்தில் பலத்த காற்றும் வீச தொடங்கியது. தொடர்ச்சியாக மாலை வரை பலத்த காற்று வீசிக்கொண்டே இருந்தது. இதனால் அவ்வப்போது மின்சாரம் தடைபட்டது. மாலையில் லேசான சாரல் மழையும் பெய்தது. இதனால் குளிர்ச்சியான காற்று வீசியது.

இந்த நிலையில் இந்த புயல் குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.