மதுரை,
மதுரையில் உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பம் உள்ளது. வாகன காப்பக பகுதியில் இன்று அதிகாலை 17 வயதான குபேந்திரன் என்ற சிறுவன் உறங்கிக்கொண்டிருந்தான்.
இந்நிலையில், அந்த வாகன காப்பக பகுதிக்கு இன்று அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்தது. அங்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுவன் குபேந்திரனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் சிறுவன் குபேந்திரன் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து தீவிர விசாரணை தொடங்கிய போலீசார், சிறுவனை கொலை செய்த முத்துமணி என்ற இளைஞர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
சித்திரை திருவிழாவில் சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட முன்விரோதம் காரணமாக சிறுவன் குபேந்திரனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துமணி கொலை செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கொலையான சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.