102 பவுன் நகைகள் கொள்ளை
கரூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 60). தொழிலதிபரான இவர், ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாண்டியன் தனது குடும்பத்துடன் கடந்த 11-ந் தேதி இரவு சென்னை சென்றுள்ளார்.
மீண்டும் 13-ந்தேதி மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவிலிருந்த 103 பவுன் நகைகள் கொள்ளைபோய் இருந்தது தெரிந்தது.
போலீசார் விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாண்டியன், கரூர் டவுன் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
சோதனை
இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் ஐந்து ரோடு பகுதியில் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமராவதி ஆற்றுப்பகுதியில் இருந்து ஐந்துரோடு பகுதியை நோக்கி கையில் பையுடன் ஒருவர் நடந்து வந்தார். போலீசாரை கண்டதும் அவர் மீண்டும் அமராவதி ஆற்றின் முட்புதர் பகுதிக்குள் சென்றார்.
இதைக்கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம், வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுகுமார் மகன் பாலாஜி (34) என்பது தெரியவந்தது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
நகைகள் மீட்பு
பின்னர் அவரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகள் குறித்து விசாரித்த போது, கடந்த 13-ந்தேதி ராமகிருஷ்ணபுரத்தில் கொள்ளையடித்த நகைகள் என்றும், மேலும் 14-ந்தேதி ஈரோடு சாலையில் உள்ள சோழன்நகரில் உள்ள ஒரு வீட்டில் திருடியதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 105 பவுன் தங்க நகைகளை மீட்டனர். இதனைத்தொடர்ந்து பாலாஜியை, கரூர் டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், பாலாஜி மீது பல மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை இருந்து வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாலாஜியை போலீசார் சிறையில் அடைத்தனர்.