திருச்சி,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அய்யம்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (29 வயது). இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து, குடும்பத்தினரை பிரிந்து வந்து திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் வேலியில் ஒரு தற்காப்பு பயிற்சி மையத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி அலெக்ஸ் பாண்டியனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். தனியாக வசித்து வந்த அலெக்ஸ் பாண்டியன் அங்குள்ள சிலரிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் தான் பணிபுரிந்து வரும் பயிற்சி மையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.