மதுரை,
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் 2020 ஜூன் 19-ல் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ கொலை வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து, ஏப்ரல் 6-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்களில் 5 பேர், தங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சிறையில் அவர்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது என்பதை இந்த மனு தள்ளுபடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.