தமிழக செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கக் கோரி மனு - சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி

தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு எல்லா உதவிகளையும் வழங்கி வருகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “முதல்-அமைச்சரின் வாகனத்தையே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்திருக்கிறார்கள். பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு எல்லா உதவிகளையும் வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க 2,169 பறக்கும் படைகளும், 2,166 கண்காணிப்பு குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.