செய்திகள்

டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி ரூ.5 லட்சம் கொள்ளை

நன்னிலத்தில், டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி ரூ.5 லட்சத்து 370-ஐ மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சேங்காலிபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 47). இவர் மணவாளநல்லூர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை 3 மணி அளவில் மதுபானம் விற்பனை செய்த பணம் ரூ.5 லட்சத்து 370-ஐ வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச் சென்றார்.

நன்னிலம் அருகே பாவேந்தர் நகர் தச்சுப்பட்டறை அருகே கர்ணன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது எதிரில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், கர்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதினர்.

இதில் கர்ணன் நிலைதடுமாறினார். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கர்ணனை சரமாரியாக வெட்டினர். இதில் கர்ணனின் இடதுபுற காதில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது காதில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் நிலைகுலைந்த கர்ணனிடம் இருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு மர்ம நபர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டனர்.

எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த நன்னிலம்- கும்பகோணம் சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் துணிச்சலுடன் அங்கு வந்து, இந்த சம்பவத்தை தடுக்க முயன்றனர். அப்போது மர்ம நபர்கள், அருகில் வந்தால் வெட்டுவோம் என்று அரிவாளைக் காட்டி அவர்களையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த கர்ணன், உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிசிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு வந்து காயம் அடைந்த கர்ணனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில், டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி ரூ.5 லட்சத்தை பறித்துச்சென்ற சம்பவம் நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை