செய்திகள்

மதரஸாக்களில் உள்ள 800 மத குருக்களை வெளியேற்றுங்கள் -இலங்கை அரசுக்கு அமைச்சர் கோரிக்கை

மதரஸாக்களில் உள்ள 800 மத குருக்களை வெளியேற்றுங்கள் என இலங்கை அரசுக்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் பதட்டமான நிலை நீடிக்கிறது. ஐ.எஸ். ஆதரவாளர்கள், இஸ்லாமிய கடும் போக்காளர்களை தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகிறார்கள். இதற்கிடையே மேலும் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதரஸாக்களில் உள்ள 800 மத குருக்களை வெளியேற்றுங்கள் என இலங்கை அரசுக்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பல்வேறு மதரசாக்களில் மத பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு இஸ்லாமிய மதகுருக்கள் 800 பேரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு இலங்கை மந்திரி படாலி சாம்பிகா ரணவாகா இலங்கை அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இவர்கள் சுற்றுலா விசாவில் வந்துவிட்டு, மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அரசை கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ரணவாகா.

முன்னதாக இலங்கை கல்வித்துறை அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் பேசுகையில், மதரஸாக்களை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.