நெல்லை,
பாளையங்கோட்டை அருகே 17 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்ற மில் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள நாதன்குடியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கலைவாணன் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அந்த பகுதியில் உள்ள மற்றொரு மில்லில் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த அந்த இளம்பெண் திடீரென்று மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெண்ணின் தந்தை சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பெண்ணின் செல்போன் எண் மூலம் அவர் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருப்பூருக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கலைவாணன், அந்த பெண்ணை கடத்தி ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இளம்பெண்ணை கடத்தியதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கலைவாணனை கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண்ணை நெல்லையில் உள்ள ஒரு பாதுகாப்பு மையத்தில் போலீசார் தங்க வைத்தனர்.