வேலூர்,
.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 37). மாட்டுவண்டி வைத்து தொழில் செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலையில் சேண்பாக்கத்தில் பெங்களூரு-சென்னை தேசியநெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரமாக தலையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று சேகரின் உடலை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று வேலூரில் தேர்தல் நடந்தது. தேர்தல் நாளில் நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. சேகர் சேண்பாக்கத்தில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாநகர துணை செயலாளர் புல்லட் மோகன் (45) என்பவர் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். அவரை கடையை காலி செய்யச்சொல்லி சேகர் கூறி வந்துள்ளார்.
இதில் அவருக்கும், சேகருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சேகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோர்ட்டில் புல்லட் மோகன் நேற்று மாலை சரண் அடைந்தார். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் மத்தியசிறைக்கு கொண்டுவரப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.