புதுடெல்லி,
ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலை தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக மேலும் ஒரு ஆண்டுக்கு நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவு செல்லும் என்றும் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அறிக்கைகளை இத்துறையின் உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவேண்டும் என்றும், அந்த அறிக்கையின் மீது அபய்குமார் சிங் முடிவெடுப்பார் என்றும் கூறியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்றும், அவரது பணிக்காலம் முடிவு பெறுவதால், அவர் விசாரித்து வரும் வழக்குகள் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களை 30-ந்தேதியோ அல்லது அதற்கு முன்னரோ அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று வாதிடப்பட்டது. இதற்கு பொன்.மாணிக்கவேல் மற்றும் டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.