புதுடெல்லி,
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியதை தொடர்ந்து, இந்த கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் என லோக் ஜனசக்தி கட்சியின் புதிய தலைவரான சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், மராட்டியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவசேனா கட்சி நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்தது. சமீபத்தில் அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றிருந்த நிலையில், முதல்-மந்திரி பதவியை பெறுவதில் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் சிவசேனா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி சார்பில் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த அரவிந்த் சாவந்த், தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் நீண்டகால உறுப்பு கட்சி வெளியேறியது, பா.ஜனதாவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குவதை முன்னிட்டு, நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சிவசேனாவுக்கு அழைப்பு இல்லை.
இந்த கூட்டத்துக்குப்பின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தியின் புதிய தலைவரும், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிவசேனா இல்லாததை அனைவரும் உணர்ந்தோம். ஏனெனில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொடக்ககால கட்சிகளில் அதுவும் ஒன்று. இந்த கூட்டணியில் இருந்து முதலில் தெலுங்குதேசம் விலகியது. பின்னர் ராஷ்டிரீய லோக் சமதா கட்சி பிரிந்தது. தற்போது சிவசேனா வெளியேறி இருக்கிறது.
கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே கட்சிகளின் சிறப்பான ஒருங்கிணைப்புக்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கும் வகிக்கும் நாங்கள் அனைவரும், வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இணைந்து செயல்படுவோம். இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் இன்னும் நடத்த வேண்டும். இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்தார்.