செய்திகள்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய முடிந்ததால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நம்பகத்தன்மையானது இளம் வாக்காளர்கள் கருத்து

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய முடிந்ததால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நம்பக்கத்தன்மையானது என இளம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். முதன்முறையாக வாக்களித்ததால் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு நின்று கொண்டு வாக்களித்ததற்கு அடையாளமாக விரலில் வைக்கப்பட்ட விரலை நீட்டி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதன்முதலில் வாக்களித்ததால் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து இளம்வாக்காளர்கள் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மருங்குளத்தை சேர்ந்த கனிமொழி(வயது20) கூறும்போது, நான் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறேன். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்ததால் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தேன். முதன்முதலாக ஜனநாயக கடமை ஆற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த சின்னத்திற்கு வாக்களித்தேன் என்பதை பார்த்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. இது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒரு சின்னத்திற்கு வாக்களித்தால் மற்றொரு சின்னத்தில் பதிவாகிறது என பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால் நான் யாருக்கு வாக்களித்தேனோ அதே சின்னம் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவியில் தெரிந்தது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது நம்பக்கத்தன்மை ஏற்பட்டுள்ளது என்றார்.

உறந்தைராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த அஜித்(22) கூறும்போது, நான் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறேன். முதன்முறையாக வாக்களிக்க வந்தது புது அனுபவமாக இருந்தது. நாட்டின் குடிமகனாக ஜனநாயக கடமை ஆற்றியது பெருமைக்குரியது. இது முதல் முறை என்பதால் நண்பருடன் சேர்ந்து வாக்குச்சாவடி முன்பு செல்பி எடுத்து கொண்டோம். நான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தேனோ அந்த சின்னம் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவியிலும் தெரிந்தது. இதனால் மகிழ்ச்சியாக இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்பட்டு இருக்கிறது என்றார்.

பட்டுக்கோட்டை கண்டியன்தெருவை சேர்ந்த திவ்யா(20) கூறும்போது, நான் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறேன். வாக்களிக்கக்கூடிய வயதை அடைந்தவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்து இருந்தேன். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று இருந்ததால் முதன்முறையாக வாக்களித்தது பெருமைக்குரியது. யாருக்கு வாக்களித்தேன் என்பதை நேரில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

தஞ்சை வடக்குவாசல் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இணைப்புகளை மாற்றி கொடுத்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த இளம் பெண் ஒருவர், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களை சரமாரியாக திட்டினார். தேர்தல் பயிற்சி வகுப்பில் என்ன தான் பயிற்சி பெற்றீர்கள். உங்களால் நான் வேறு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சத்தம்போட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை