மும்பை,
சாங்கிலி, சத்தாரா, கோலாப்பூர், புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று(திங்கட்கிழமை) மாநில முதல்-மந்திரிகளுடன் ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின்போது அந்நாட்டுடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், முதலீட்டை ஈர்க்கவும் முடிவு செய்திருந்தார். இந்தநிலையில் மராட்டிய மழை அழிவின் காரணமாக தனது பயணத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரத்து செய்துள்ளார்.
முதல்-மந்திரி செல்லாத நிலையில் ரஷிய பயணத்தின்போது வர்த்தக மற்றும் தொழில் துறைமந்திரி பியூஷ் கோயல் மராட்டியத்தின் பிரதிநிதியாக செயல்படுவார் என மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று மந்திராலயாவில் முதல்-மந்திரி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஏற்கனவே நிவாரண உதவி அறிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் தலா ரூ.5 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும். மீதமுள்ள நிவாரண தொகை வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் தொழில் முடங்கியுள்ளதால் பால், காய்கறி மற்றும் அத்யாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே நிவாரண தொகையை ரொக்கமாக வழங்கவேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.