கரூர்,
ரூ.12 கோடியில் புதிய திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துறைத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, ரூ.12 கோடியில் புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காதப்பாறை ஊராட்சி பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து 17 குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர்கொண்டு சேர்க்க குடிநீர் குழாய் அமைப்பதற்கு ரூ.7 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்ட பணிகள் தொடங் கப்பட்டுள்ளது. இதேபோல புகளூர் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டு, தற்போது வட்டாட்சியர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கான புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 5 லட்சம் ஒதுக்கப்பட்டு, வேலாயுதம்பாளைத்தில் உள்ள வட்டாட்சியர் குடியிருப்புடன் கூடிய, இரண்டு தளங்கள் கொண்ட அலுவலகம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் க.பரமத்தியில் உள்ள பவர்கிரிட் நிறுவனத்தின் ரூ.1 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் நிதியில் இருந்து க.பரமத்தி ஊராட்சிஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கலையரங்கம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.11 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமிபூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் காளியப்பன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் பாலமுருகன்(கரூர்), மார்கண்டேயன் (க.பரமத்தி), கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.சி.எஸ். விவேகானந்தன், புஞ்சைபுகளூர் பேரூர் கழக செயலாளர் சரவணன், காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் சதாசிவம் உள்பட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.