செய்திகள்

கரிசங்கல்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் - காஞ்சீபுரம் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கரிசங்கல்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று காஞ்சீபுரம் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம், கரிசங்கல் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரிசங்கல் குளத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. அதுபற்றி வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, புகார்தாரருக்கும், குளத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கரிசங்கல் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இதுவரை அப்புறப்படுத்தவில்லை என்று நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, இந்த வழக்கில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறேன். அவர், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அது தொடர்பான அறிக்கையை வருகிற ஜூன் 3-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.