வேதாரண்யம்,
ஆமை இனங்களில் ஆலிவ் ரெட்லி இனம் மிகவும் அரிய வகையை சேர்ந்ததாகும். பெரும்பாலும் இவை ஆழ்கடல் பகுதியில் தான் வசிக்கின்றன. கரையோரம் அவற்றை காண்பது மிகவும் அரிது. முட்டையிடுவதற்காக மட்டுமே ஆலிவ் ரெட்லி ஆமை இனங்கள் கரைக்கு வருகின்றன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதற்காக ஆமைகள் கடலில் நீண்ட தூரம் பயணித்து கோடியக்கரை பகுதிக்கு வருகின்றன. கோடியக்கரையில் நிலவும் இயற்கை சூழலே இதற்கு காரணம்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக கோடியக்கரை பகுதிக்கு அதிக அளவு வருகின்றன. கடற்கரையில் மண்ணை தோண்டி ஆமைகள் முட்டையிடுகிறது. இந்த மூட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொரிக்க வைப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வனத்துறையால் ஆண்டு தோறும் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளில் வனத்துறையின் சார்பில் ஆமை குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையில் இருந்து ஆமை குஞ்சு வெளிவருவதற்கு 45 நாட்கள் முதல் 55 நாட்கள் வரை ஆகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் ஆமைகளை வனத்துறையினர் உடனுக்குடன் கடலில் விட்டு விடுகின்றனர்.
கடலில் விடப்படும் ஆமை குஞ்சுகள் 20 ஆண்டுகள் கழித்து அதே கடற்கரைக்கு வந்து முட்டையிடுகின்றன. இதனால் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. ஆழ்கடலில் இருந்து முட்டையிட வரும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும் அவலம் நீடித்து வருகிறது.
இறந்த கரை ஒதுங்கும் ஆமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வனத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்து 700 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இவை குஞ்சி பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த 5 ஆயிரத்து 425 ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர். ஆனால் இந்த ஆண்டு இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதுவரை ஒரு முட்டை கூட சேகரிக்கப்படவில்லை.
இது இயற்கை ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி வேதாரண்யம் பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஆழ்கடலில் வசிக்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள் வேதாரண்யம் கடற்கரையில் முட்டையிடுகின்றன. இதற்காக ஆழ்கடலில் இருந்து கரையை நோக்கி வரும் ஆமைகள், படகுகளில் சிக்கி காயம் அடைந்து, இறந்து விடுகின்றன. அழிந்து வரும் இனமான ஆலிவ்ரெட்லி ஆமைகளை பாதுகாப்பது குறித்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
பருவ நிலைகளில் மாறுபாடு ஏற்படுவதும் ஆமைகளின் இறப்புக்கு காரணமாக உள்ளது. ஆமைகளை மீனவர்களின் நண்பன் என்று அழைக்கலாம். இந்த நிலையில் ஆமைகள் நாள்தோறும் இறந்து ஒதுங்குவது மீன்வளத்தையும் பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.