திருத்துறைப்பூண்டி,
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு, ரத்தத்தால் கையெழுத்திடப்பட்ட கோரிக்கை மனுவை அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கங்கள் அறிவித்தனர்.
அதன்படி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருத்துறைப்பூண்டியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் கீர்த்திவாசன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வைரவநாதன், இணை செயலாளர்கள் தனபால், தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன், வருவாய்த்துறை அலுவலக சங்க வட்ட செயலாளர் ஜோதிபாசு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரவிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்தத்தில் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அனுப்பினர். முன்னதாக ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.