நெல்லை,
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சந்தானம் மனைவி சுப்புலட்சுமி (வயது 66). இவருடைய மகன் கோமதிநாயகம் (39). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. கோமதிநாயகத்தின் மனைவி சித்ரா. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கோமதிநாயத்திடம் இருந்து சித்ரா பிரிந்து சென்று விட்டார். கோமதிநாயகம் தாய் சுப்புலட்சுமியுடன் வாழ்ந்து வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி கோமதிநாயகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அதை சுப்புலட்சுமி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோமதிநாயகம் சுப்புலட்சுமியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதிநாயகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர், குற்றம் சாட்டப்பட்ட கோமதி நாயகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.