செய்திகள்

செம்மொழியான தமிழ் மொழியாம்...!

மொழிப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய பன்முக அணுகுமுறை அவசியம்.

சமஸ்கிருதம், பாலி, பிரக்ரித், அரபி, பெர்ஷியா, தெலுங்கு, கன்னடம், ஒடியா, மலையாளம் ஆகிய மொழிகளின் அறிஞர்களுக்கு ஜனாதிபதி விருதை சமீபத்தில் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மொழிகளை பாதுகாப்பதற்கும், செம்மொழிகளின் மேம்பாட்டுக்காகவும் சேவையாற்றி வருவதற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய அறிவை தொடர்ந்து தக்க வைப்பதோடு, கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்துக்கும் இடையே பாலமாக இருக்கும் புகழ்பெற்ற அறிஞர்களை நமது நாடு பாராட்டி அங்கீகரித்து வருகிறது. நமது மொழிக்கான வெளிச்சம் தொடர்ந்து நீடிக்காமல் போனால், நாம் இருண்ட உலகத்தில் தடவித் திரிந்து கொண்டிருப்போம் என்று இந்தியாவின் தலை சிறந்த கவிஞர் ஆச்சார்யா தண்டி குறிப்பிட்டுள்ளார்.

அறிவை வெளிப்படுத்துவதற்கும், உணர்வுகளை வெளிக்கொணர்வதற்கும் மொழி ஒரு கருவியாக உள்ளது. கலாசாரம், அறிவியல், உலக கருத்துக்களை பரப்புவதற்கான வாகனமாக மொழிகள்தான் இருக்கின்றன. பழமையையும், புதியதையும் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத நூல்தான் மொழி.

மொழியியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பாதுகாக்க வேண்டும் என்பதை நான் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன். நமது கலாசாரம், சமூகமாக நாம் பெற்றுள்ள பரிணாம வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றில் நமது மொழி ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. நமது பாரம்பரியம், அடையாளம், பழக்க வழக்கங்களை விளக்குவதே மொழிதான். மக்களிடையே அன்பின் இணைப்பை உருவாக்குவதற்கும், பலப்படுத்துவதற்கும் மொழி முக்கிய பங்காற்றுகிறது.

நமது நாடு பல மொழிகளைக் கொண்டது. 19 ஆயிரத்து 500 மொழிகளுக்கு மேல் இங்கு பேசப்படுகிறது. இங்குள்ள மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர், பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒரு மொழியைப் பேசுகின்றனர். இந்தோ ஐரோப்பிய பழம் மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம், கி.மு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மொழியாகும்.

பழங்கால இலக்கிய தொன்மையைக் கொண்டிருக்கும் சில மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் இருந்தன. தெலுங்கு கி.மு. 400 ஆண்டுகளுக்கு முன்பும், கன்னடம் கி.மு. 450 ஆண்டுகளுக்கு முன்பும், மலையாளம் கி.பி. 1,198-ம் ஆண்டில் இருந்தும், ஒடியா கி.பி. 800-ம் ஆண்டிலிருந்தும் பேசப்படும் மொழிகளாகும்.

இவற்றில் ஒவ்வொரு மொழியும் இலக்கிய பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டிருந்த மொழிகளாகும். சங்ககால இலக்கியங்கள், தொல்காப்பியம் போன்றவை தமிழை சிறப்பிக்கின்றன. இந்த மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இலக்கியங்கள் எல்லாம், அந்த மொழி பேசுவோரின் பெருமையாகவும், சிறப்பு அடையாளத்தைக் கொடுப்பதாகவும், பெண் தெய்வமாக வணங்கப்படத் தக்கதாகவும் உள்ளன.

மொழிகளை புகழ்வதற்கான பாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கு, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் உள்ளது. அந்தப் பாடலில் உள்ள, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே என்ற வரிகள் பேரானந்தத்தோடு பாடப்படு கிறது. செம்மொழிகள் அனைத்தும், நமது முந்தைய கலாசார செழிப்புகளையும், முன்னோரின் சிறந்த சிந்தனைகளையும், தத்துவங்களையும் காட்டும் ஜன்னல்களாய் உள்ளன.

மொழியைக் காப்பாற்றாமலும், அதனுடனான இணைப்பை பேணாமலும் விட்டுவிட்டோமானால், நமக்கென்றிருக்கும் பொக்கிஷத்தை திறக்கும் சாவியைத் தொலைத்ததாகத்தான் அர்த்தம். நிபுணர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வின்படி, சுமார் 600 மொழிகள் முழு அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், கடந்த 60 ஆண்டுகளில் 250 மொழிகள் மறைந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

ஒரு மொழி அழியும்போது, அதுதொடர்பான ஒரு கலாசாரமும் அழிகிறது. அப்படி ஒரு அழிவு வருவதை நாம் விட்டுவிட முடியாது. மொழி மற்றும் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. பழைய மொழிகளை படிப்பதும் அதை நவீன மக்களிடையே பிரதிபலிப்பதும் தற்போதைய தேவையாக உள்ளது.

அதற்கு, பழங்கால உரைகள், எழுத்துக்களை பாதுகாப்பதுதான் முதல்படி. இதற்காக மொழி அறிஞர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்து, புதிய அறிவுகளை தோண்டி வெளிக்கொணர உதவ வேண்டும். அறிவை சேகரித்து, தற்காலமும் எதிர்காலமும் பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.

பல்வேறு மொழிகளைப் பேசும் பலதரப்பு மக்களுக்கும் சேவையாற்றும் நோக்கத்தில், உள்ளூர் மொழிகளில் தகவல் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்க வேண்டும். அறிவுசார்ந்த நாடாகவும், அறிவுச் செறிவுள்ள சமுதாயமாக மாறுவதற்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவும்.

மொழிப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய பன்முக அணுகுமுறை அவசியம். அது ஆரம்பக் கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். உயர் கல்வி வரை அது தொடர வேண்டும். ஒருவருக்கு எழுத்தறிவு என்பது ஒரு மொழியிலாவது முழுமையாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்.

சொந்த ஊரில் உள்ள மொழியையே வீடு, சமுதாயம், கூட்டங்கள், நிர்வாகம் ஆகியவற்றில் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். அந்த மொழிகளிலேயே கவிதை, கட்டுரை, நாடகம், நாவல், கதைகளை எழுத வேண்டும். இந்திய மொழிகளில் உள்ள வெளியீட்டாளர்கள், பத்திரிகைகள், புத்தகங்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு ஒரு கிரியா ஊக்கியாக மொழி அமைய வேண்டும். நல்ல நிர்வாகத்துக்கு மொழி மேம்பாடு, ஒரு முக்கிய அம்சமாக அமைய வேண்டும்.

எம்.வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...