பெங்களூரு,
மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை மக்கள் புறக்கணித்துவிட்டு, பா.ஜனதாவை ஆதரித்தனர். பா.ஜனதா கட்சி 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் திடீர் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர். 14 மாதங்கள் ஆட்சி நடத்தியவர்கள், மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு சித்தராமையா தான் காரணம் என்று குமாரசாமி கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்காததால் தான் கூட்டணி அரசு கவிழ்ந்ததாக குமாரசாமி மீது சித்தராமையா குற்றச்சாட்டு கூறினார். தற்போது 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கூட்டணி அரசை கவிழ்த்ததாக மக்களிடையே தவறான தகவல்களை சித்தராமையாவும், குமாரசாமியும் கூறி வருகின்றனர்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நிலையான ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காக இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை கூறி தோற்கடிக்க நினைக்கின்றனர். பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் முயற்சிக்கின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இடைத்தேர்தலுக்கு பின்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று பரமேஸ்வர் சொல்கிறார்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று சித்தராமையா சொல்கிறார். காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. மாநிலத்தில் இனிவரும் 3 ஆண்டுகளும் நிலையான ஆட்சி அமைய வேண்டும், வளர்ச்சி பணிகள் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர். நிலையான ஆட்சி மாநிலத்தில் அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இதனால் இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.
தேர்தல் பிரசாரத்தின் போது கண்ணீர் வடித்தால் ஜனதாதளம்(எஸ்) கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று குமாரசாமி கனவு காண்கிறார். இடைத்தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரியாகி விடுவேன் என்று சித்தராமையா கனவு காண்கிறார். அவர்கள் 2 பேரின் கனவு பலிக்காது. எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு பா.ஜனதா வேட்பாளர்கள், பிற தலைவர்களை தரக்குறைவாக சித்தராமையா பேசுவது சரியல்ல. இதுபோன்று பேசுவதை சித்தராமையா நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியை அழித்துவிட்டு காங்கிரசுக்கு சித்தராமையா வந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியை அழிக்கும் முயற்சியில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார். குருபா சமுதாயத்தை சேர்ந்த அவர், அந்த சமுதாயத்தை சேர்ந்தவரின் வளர்ச்சிக்காக இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.