தளி,
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை கோவில் உள்ளது. உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வருகின்ற வழியில் திருமூர்த்தி அணை படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்டவையும் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளன. இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும் கோடை விடுமுறை காலமாக இருப்பதாலும் திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பஞ்சலிங்க அருவி தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் ஏமாற்றம் அடையும் சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி அணையில் குளித்து மகிழ்கின்றனர். இவ்வாறு அணைப்பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் எதிர்பாராத விதமாக அணையில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்தன.
அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை திருமூர்த்தி அணையில் இறங்கி குளித்த தஞ்சாவூர் மாவட்டம் பூதனூரைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணன் என்பவரது மகள் கீர்த்தனா (வயது 14) தண்ணீரில் மூழ்கி இறந்தார். அணையில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்துவதற்காக அணையின் திறந்தவெளிப்பகுதியில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கம்பிவேலியை ஒருசில பகுதியில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி பாதை அமைத்துள்ளனர்.
அதன் வழியாக சுற்றுலா பயணிகள் அணைக்குள் சென்று குளித்து வருவது தொடர் கதையாக உள்ளது. இதையடுத்து அணைப்பகுதியில் வனத்துறையினர், பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் இணைந்து ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அணையில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று முதல் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் ரோந்து சென்ற போது திருமூர்த்தி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்தும், செல்பி எடுத்தும் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதேபோன்று கோடை காலம் மட்டுமல்லாது விசேஷ நாட்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று சாதாரண நாட்களிலும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.