திருவாரூர்,
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங் களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். மேலும் நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்கி தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று தைமாத அமாவாசையையொட்டி திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர். இதனால் குளத்தின் கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதே போல திருவாரூரை அருகே உள்ள குருவி ராமேஸ்வரத்திலும் திரளான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.