ராய்பூர்,
சட்டீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தலைநகர் ராய்பூரில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில் உள்ள சுக்மாவில் உள்ள முலேர் என்ற கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆப்ரேஷன் நக்சல் தடுப்பு என்ற பெயரில் களம் இறங்கிய மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
துப்பாக்கிச்சண்டை முடிவில், சம்பவம் நடைபெற்ற இடத்தில், மூன்று மாவோயிஸ்டுகள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. வனப்பகுதிக்குள் இன்னும் தீவிர தேடுதல் வேட்டையில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.