நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் நெல்லை மாநகர் பகுதியில் 10 பேரும், பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி, குழந்தை உள்பட 5 பேர் அடங்குவர்.
மேலும் கொக்கிரகுளத்தை சேர்ந்த ஒரு பெண், நெல்லை டவுனை சேர்ந்த ஒரு வாலிபர், பேட்டையை சேர்ந்த ஒரு பெண், பழையபேட்டை அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண், வெங்கடாச்சலபேரி பகுதியை சேர்ந்த கணவன்-மனைவி ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர 7 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.
500-ஐ கடந்தது
இவர்கள் அனைவரும் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் தங்கி இருந்த பகுதிகள் கொரோனா தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 379 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 127 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்து உள்ளார்.
தென்காசியில் 13 பேர்
தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திரவியநகர் பகுதியை சேர்ந்த 3 பேரும், தேவிப்பட்டினம் பகுதியை சேர்ந்த 2 பேரும், தென்காசி, நல்லூர், லட்சுமிபட்டி, கீழக்கலங்கல் பகுதியை சேர்ந்த தலா ஒருவரும், கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த 4 பேரும் அடங்குவர்.
இவர்களையும் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்தது. இதில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 64 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில், சிறுத்தொண்டநல்லூர், கீழபூவானி, நாங்குநேரி அருகே உள்ள டோனாவூர், கோவில்பட்டி வடக்கு செமப்புதுக்குளம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில் கோட்டார், தட்டார்மடம், பெரியதாழை, நாசரேத், பெரியதாழை பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த 4 பேர், மேலபுதுக்குளத்தை சேர்ந்த 3 பேர், தருவைக்குளத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 25 பேர் கொரோனா அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.