நெல்லை,
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினமும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
இதேபோல் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்தும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் இருந்து நெல்லைக்கு வருபவர்களாலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
டாக்டர் மாமனார்- மாமியார்
இதில் நெல்லையை சேர்ந்த பிரபல டாக்டரின் மாமனார், மாமியார் ஆகிய 2 பேரும், அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சளி தொந்தரவால் சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்திய சோதனையில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் 70 வயதை கடந்தவர்கள். இதையடுத்து அவர்கள் தங்கி இருந்த மகாராஜநகர் பகுதி கொரோனா தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல் பாளையங்கோட்டை ஜெயில் வார்டன் மனைவிக்கும், நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. சாந்திநகர் பகுதியில் ஒருவரும், வி.எம்.சத்திரம் பகுதியில் ஒருவரும் என மாநகர பகுதியில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 2 பேருக்கும், அம்பை கல்லிடைக்குறிச்சி, அடையகருங்குளம் ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கும், சேரன்மாதேவி, நாங்குநேரி, களக்காடு பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தவிர மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வந்தவர்களான வள்ளியூர் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், அம்பை பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், முன்னீர்பள்ளம், நாங்குநேரி, பேரின்பபுரம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும் என 8 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
489 ஆக அதிகரிப்பு
இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 489 ஆக அதிகரித்தது. இவர்களில் 376 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்து உள்ளார்.
ஜெயில் வார்டன் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி, பாளையங்கோட்டை பெருமாள்புரம் சிறைக்காவலர் குடியிருப்பு பகுதியிலும், மருந்து விற்பனை பிரதிநிதிக்கு தொற்று உறுதியானதையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியிலும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
தூத்துக்குடியில் 38 பேருக்கு தொற்று
தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் கொரோனா தொற்று இல்லாத நிலையில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தவர்கள் பலருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி முத்தம்மாள்காலனி, முள்ளக்காடு, முத்தையாபுரம், கோவில்பட்டி, நாகலாபுரம், விளாத்திகுளம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசியில் 8 பேர்
தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆலங்குளம் பகுதியை 3 பேரும், ஆலடிப்பட்டியை சேர்ந்த 2 பேரும், தேவிப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒருவரும் ஆவார்கள். மேலும் 2 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.