செய்திகள்

கொரோனாவை தடுக்க கடுமையான முடிவுகள் எடுக்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

கொரோனாவை தடுக்க கடுமையான முடிவுகள் எடுக்கப்படும். மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தான் தொற்று பரவி வருகிறது. தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். ஒருபுறம் மக்களின் உயிரையும் மற்றொரு புறம் மாநிலத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புதுவை மாநிலத்தில் தற்போது இரவு 9 மணிக்கு மேல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இரவில் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். நேற்று (நேற்று முன்தினம்) இரவு கலெக்டர் புதுச்சேரி நகர் முழுவதும் ஆய்வு நடத்தி இரவு 9 மணிக்கு மேல் திறந்து வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைத்துள்ளார். வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும். ஆனால் பொதுமக்களிடம் இருந்து ஒத்துழைப்பு மிக குறைவாக உள்ளது.

நகைக்கடைகளை காலை 10 மணிக்கு திறந்து மாலை 6 மணிக்கு மூடுவதற்கு தயாராக இருக்கிறோம் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போது வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அதன்படி மீன் மொத்த வியாபாரம் நவீன மீன் மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. காய்கறி கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையை பொறுத்தவரை தற்போது கொரோனா வைரஸ் நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க இன்னும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளேன்.

நாளுக்கு நாள் தனிமைப்படுத்தப்படும் பகுதி அதிகரித்து வருகிறது. தற்போது கிராம பகுதிகளிலும் கொரோனா பரவி வருகிறது. முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வந்த நன்கொடையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு காய்கறிகள், மளிகை சாமான்கள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் பல துறைகளுடன் இணைந்து வழங்கி வருகிறார்கள்.

பிரதமர் மோடி மாநில முதல்-அமைச்சர்களுடன் நாளை மறுநாள் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். இதில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. புதுவை மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தினால், அதனால் ஏற்படும் இழப்பை தர மத்திய அரசு தயாராக இல்லை. புதுவையை போன்று கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்வது இல்லை. மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக கவனம் செலுத்துவதைபோல் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். தேவையான நிதி உதவி வழங்குமாறு கண்டிப்பாக பிரதமரிடம் வலியுறுத்துவேன்.

மத்திய அரசின் நிதி நமக்கு கிடைக்காததால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். மாநில வருவாய் குறைந்த நேரத்தில் மத்திய அரசு உதவி செய்யவேண்டும். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து சில மாநிலங்களை புறக்கணித்து வருகிறது.

புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பணிக்காக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கலந்து பேசி ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களை நியமிக்க உள்ளேன். இதுதொடர்பான கோப்பு ஏற்கனவே தயாராக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து டாக்டர்களை பெறவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தேவையான மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் செய்ய தேவையான உபகரணங்கள் வாங்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.கிட்டுகள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிக பரிசோதனைகள் செய்தால் தான் கொரோனா நோயாளிகளை கண்டறிய முடியும். எனவே முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்க உள்ளோம்.

புதுவையில் ஒரு சில கடைகளில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. அந்த கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வேகமாக பரவும் காலம். இதனை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிரதமரின் உரைக்கு பின்னர் சில கடுமையான முடிவுகளை அரசு எடுக்கும் நிலை ஏற்படும். அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். மக்களின் உயிர் மிக முக்கியம். அதை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் உரிமையை காக்க மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு