செய்திகள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை - கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. தொப்பூர், காரிமங்கலம் சோதனைச்சாவடிகளில் கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இ-பாஸ் இல்லாமல் கார் உள்ளிட்ட வாகனங்களில் பிறமாவட்டங்களுக்கு தர்மபுரி மாவட்டம் வழியாக சென்ற வண்ணம் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், காரிமங்கலம், திப்பம்பட்டி, மகேந்திரமங்கலம், மஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைச்சாவடிகளில் போலீசார், சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் முழு சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். மேலும் இ-பாஸ் இல்லாமல் செல்வோரை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் தொப்பூர், காரிமங்கலம், திப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை அவர்களே நிறுத்தி சோதனை செய்தனர். இந்த ஆய்வின் போது சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் எந்த வாகனமும் தர்மபுரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. மேலும் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது இ-பாஸ் இல்லாமல் வந்த 2 கார்களை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜ்குமார், சீனிவாசன், தாசில்தார்கள் கலைச்செல்வி, கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தண்டபாணி, சுருளிராஜன், இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், அம்மாதுரை மற்றும் வருவாய்துறையினர், காவல்துறையினர் உடனிருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்