வாஷிங்டன்,
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வேறு எந்த நாட்டுக்கும் விதிக்காத வகையில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகள் ஈரானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஈரானின் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரீப்புக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஜாவத் ஷாரீப், ஈரான் தலைவர் அயத்துல்லா அல் காமெனியின் கைப்பாவையாக இருந்துகொண்டு அபாயகரமான செயல்களை மேற்கொண்டு வருவதாகவும், எனவே அவர் மீது கடுமையான தடைகள் விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜவாத் ஷாரீப் அமெரிக்க நிதி ஆதாரங்களை பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில் உள்ள அவரது சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஈரான் தலைவர் அயத்துல்லா அல் காமெனி மற்றும் ராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் மீது அமெரிக்கா தடைகளை விதித்தது நினைவுகூரத்தக்கது.